எதிரொலி அனுபவம்
நானும் சில நண்பர்களுமாய் வெள்ளக்குட்டைக்கு அருகில் உள்ள ஒரு குன்றின் மீது ஏறினோம்.பிற்பகல் நேரம்.சூரியன் சுடாத வெயில்.
கால்களோ தொடைகளோ வலிக்காத நடைப்பயணம். காட்டுப்பாதை.உச்சியை எட்டியபோது அதிக உயரத்தில் நின்றவன் நான் தான்.
நீலக்கூடாரமாக வியாபித்திருந்த வானத்தில் மேகம் மூடிய மெல்லிய ஒளியில் விரிந்திருந்தது வயல்வெளிப்பிரதேசம். அது தான் எனது சாம்ராஜ்யம் போலவும், அதை நான் பார்வையிட வந்த சக்கரவர்த்தி போலவும் போயிற்று என் மனப்போக்கு. எனது ஆளுகைக்கு யாவும் உட்பட்டிருப்பது போலவும் அதன் மீது என் அன்பு பேரலையாய்ப் பரவியிருப்பது போலவும் ஒரு கற்பனை.
அந்தச் சமயத்தில் எங்கோ ஒரு பறவையின் குரல் எழ இரண்டு மூன்று கணங்களில் அதற்கொரு எதிரொலி வந்தது. கூர்ந்து கவனித்தேன்
ஓர் ஒலி . அதற்கோர் எதிரொலி. ஏதோ ஒரு கேள்வியும் அதற்கு ஒரு பதிலும் போல் அவை தோற்றமளித்தன.
பறவை எனக்குள் ஓர் உயிரின் உந்தலை எழுப்பிற்று. நானும் பறவையாகிக் கூவ வேண்டும் என்று தோன்றியது. 'க்குவோ ' என்று கூவினேன் .ஒரு முறை. இருமுறை.
அடுத்த வினாடி நான் மனிதன் என்ற பழக்க ஞாபகம் மீண்டு விட்டது.
ஏன் பறவையாகக் கூவ வேண்டும்?
ஒரு மனிதனாக நான் மிகவும் நேசிக்கிற ஒரு மனிதனை அழைக்கிற மாதிரி ஏன் கூவக்கூடாது?
யார் அந்த நான் மிகவும் நேசிக்கிற மனிதன்?
மின்னல் போல் என் மனசுக்குள் என் கேள்விக்குப் பதில் வந்தது.
காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்று ஈதர் வெள்ளமாகப் பரவிய பாரதி நினைவு வந்தது.
'பாரதீ' என்று கூப்பிட்டேன்.
ஒலி அலை அலையாக குன்றின் உச்சியில் இருந்து அடிவானத்திற்கு ஒரு நிமிடம் நீண்டது.
காத்திருந்தேன்.
எதிரொலி வந்தது.
கூப்பிட்டாயா நண்பா என்று கேட்பது போல் .
'பாரதீ'
'பாரதீ'
மெதுமெதுவாய் ஸ்வரம் அடங்கி அடங்கி ஒலி கரைந்து மௌனம் மீண்டது
இரண்டு முறை அந்த அனுபவத்தில் திளைத்ததும் போதும் என்று தோன்றியது.
'எத்தனை கோடி இன்பங்கள் வைத்தாய் இறைவா எங்கள் இறைவா?'
கடவுளோடு ஓர் உரையாடல் நடத்திய நிறைவு எனக்குள்.
No comments:
Post a Comment