சங்கிலிகள் வையவன்
முன்னுரை
“மனிதன் பிறக்கும்போது சுதந்திரமாகத்தான் பிறக்கிறான். ஆனால் பிறந்த பிறகு அவனுக்கு உலகில் எங்குமே சங்கிலிகள் தான்” என்றான் பிரெஞ்சுப் பேரறிஞன் ரூசோ. இது சமுதாய ஒப்பந்தம் என்ற அவனது தலைசிறந்த நூலின் தொடக்க வாக்கியம்.
சமூகம் தனிமனிதனைத் தன் வலுவான சங்கிலிகளால் இறுகக் கட்டிப் பிணைத்துவிடுகிறது. பிறந்தவன் இறக்கும் வரை சங்கிலிகளுக்கு ஓய்வில்லை. அவன் சந்திக்க வேண்டியவை -
எத்தனை கொடுமைகள்! எத்தனை குரூரங்கள்! எத்தனை எத்தனை வன்முறைகள்!
இந்த நாவலின் கதாநாயகப் பெயரே சங்கிலி. சமூகம் அவன் மேலும் பல சங்கிலிப் பிணைப்புக்களை ஏற்படுத்தியது.
அன்புச் சங்கிலி, பாசச் சங்கிலி, காதல் சங்கிலி, காமச் சங்கிலி. இத்துடன் கூட ஆதிக்க வெறியும், பணத்திமிரும் இணைந்து போட்ட ஆணவச் சங்கிலி வேறு அவனை எதிர்கொண்டது.
மென்மையான சங்கிலிகளிடமிருந்து அவன் விடுபட முடிந்தது.
ஆனால் நீதிக்கும் நியாயத்திற்கும் புறம்பான சமூகக் கொடுமைகள் அவனை சீறி எழ வைத்தன.
தனிமனிதனாக, அநாதையாக வாழ நோ்ந்தது அவன் விதி.
எனினும் கொடுமையின் மூலக் கூற்றோடு மோதும் பணியில் அவன் ஈடுபட்டுக்கொண்டே இருந்தான்.
சிறிது கூடத் தன்னலக் கலப்பற்ற அவனது ஆண்மைப் பெருமிதம், பெண்மையின் கௌரவத்தை எப்போதுமே போற்றி நின்றது.
வாய்ப்புக்கள் வந்தாலும் பெண்மையை மாசுபடுத்த அவன் மனம் விரும்பியதே இல்லை.
அவன் தான் இந்த நாவலானான்.
வெறும் கதை சொல்லி வாசகா் பொழுதைப் பாழாக்குவது ஒருபோதும் எனக்கு ஒவ்வாதது.
மனித உள்ளங்களின் அடியாழத்தில் உறங்கும் மேன்மைப் பண்புகளையும், பல நுட்பமான உணா்வின் அதிர்வுகளையும் உசுப்பி எழுப்பு! பதிவு செய்!
ஓர் இலக்கியப் படைப்பை வாசித்து முடித்த ஒரு வாசகரின் இதயவீணையில் மௌனமான உயர்வகை ராகங்களை உதிக்கச் செய்!
இதுதான் என் இலக்கியக் கொள்கை, கோட்பாடு, நடைமுறை, ஏன் தவமே கூட!
கடல் கடந்த மலேசியத் தமிழ் கூறு நல்லுலகம் ‘தமிழ்நேசன்’ இதழில் இதை வெளியிட்டு வாழ்த்தியது நூலாக்கினோர் பூரித்தார்கள். இனி தீா்ப்பு உங்கள் கையில்!
மிக்க அன்புடன்
சென்னை - 600 022 வையவன்
No comments:
Post a Comment